வாகனங்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறி வியாபாரி உள்பட 3 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி. போலி பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது

போலீசார் பறிமுதல் செய்யும் வாகனங்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறி வியாபாரி உள்பட 3 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த போலி பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-28 18:09 GMT
வேலூர்

போலீசார் பறிமுதல் செய்யும் வாகனங்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறி வியாபாரி உள்பட 3 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த போலி பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

குறைந்த விலையில் வாகனங்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு இந்திராநகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 43), வியாபாரி. இவருடைய நண்பர்கள் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் சுங்கவார்சத்திரத்தை சேர்ந்த ரோகிணி (32) அறிமுகமானார். தினேஷ்குமார் செல்போனில் ரோகிணியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தற்போது வேலூரில் இருப்பதாக தெரிவித்து உள்ளார். அதையடுத்து அவர் நேரில் ரோகிணியை சந்தித்து பேசினார்.

அப்போது ரோகிணி, சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தாகவும், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், வேலூரில் ஒரு வேலை விஷயமாக தங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படம், அடையாள அட்டையை காண்பித்த அவர், போலீசாரால் பல்வேறு குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை விற்பனை செய்து வருகிறேன். எனவே வாகனங்கள் ஏதாவது தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம். குறைந்த விலையில் வாகனங்கள் தருகிறேன் என்று தினேஷ்குமாரிடம் கூறி உள்ளார்.
ரூ.24 லட்சம் மோசடி

இதனை உண்மை என்று நம்பிய அவர் முதற்கட்டமாக 2 கார்கள் தேவை என்று முன்பணமாக ரூ.2 லட்சத்தை வேலூர் பழைய பஸ்நிலையத்தில் வைத்து ரோகிணியிடம் கொடுத்தார். மீதமுள்ள 12 லட்சத்தை அவருடைய கணவர் சந்துருவின் வங்கிக்கணக்கில் சில நாட்களில் செலுத்தி உள்ளார். மேலும் இதுகுறித்து தினேஷ்குமார் தனது நண்பர்களிடம் தெரிவித்தார். அதன்பேரில் 2 நண்பர்கள் 2 கார் தேவை என்று தலா ரூ.5 லட்சம் கொடுத்துள்ளனர். அதனையும் தினேஷ்குமார், சந்துருவின் வங்கிக்கணக்கில் செலுத்தினார். ஓரிரு வாரங்களில் 4 கார்களையும் கொடுப்பதாக ரோகிணி கூறி உள்ளார்.

ஆனால் சில வாரங்கள் ஆகியும் அவர் கூறியபடி கார்களை வழங்கவில்லை. அதையடுத்து தினேஷ்குமார் செல்போனில் சில நாட்களாக ரோகிணியை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அதற்கு அவர் சரியான பதில் தெரிவிக்காமல் காலம் கடத்தி மோசடி செய்து வந்துள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார் கடந்த 25-ந் தேதி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனிடம் புகார் அளித்தார்.

போலி பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது

இதுகுறித்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ரோகிணி சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி வாகனங்கள் வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதும், அதற்கு அவருடைய கணவர் சந்துரு உடந்தையாக இருப்பதும், ரோகிணி வேலூரில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் நேற்று ரோகிணியை கைது செய்தனர். அவரிடமிருந்து சப்-இன்ஸ்பெக்டர் சீருடை, அடையாள அட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவருடைய கணவர் சந்துருவை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். கடந்த 2012-ம் ஆண்டு போலீஸ் சீருடையில் சுற்றித்திரிந்த ரோகிணி வேலூர் பாகாயம் போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்