குடிக்க தண்ணீர் கேட்பது போன்று நடித்து பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
குடிக்க தண்ணீர் கேட்பது போன்று நடித்து பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார்தேடி வருகின்றனர்.;
வேலூர்
அணைக்கட்டு தாலுகா ஊசூர் அருகே உள்ள வி.ஆர்.பாளையம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேசா (வயது 55). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. ரமேசா நேற்று காலை ஊசூர்-அணைக்கட்டு சாலையில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் குடிப்பதற்கு கேட்டுள்ளார். அதையடுத்து ரமேசா தண்ணீர் எடுப்பதற்காக மோட்டார் அறை நோக்கி சென்றார். அப்போது அந்த வாலிபர் திடீரென அவரின் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்தார். அதனால் அதிர்ச்சி அடைந்த ரமேசா திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் வேகமாக ஓடி சாலைக்கு சென்று அங்கு ஏற்கனவே மோட்டார் சைக்கிளுடன் தயாராக நின்றிருந்த மற்றொரு மர்மநபருடன் தப்பி சென்றார்.
இதுகுறித்து ரமேசா அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்மநபர்களின் உருவம் ஊசூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.