முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து கிருஷ்ணகிரி ஓசூரில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரி ஓசூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி:
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரி, ஓசூரில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனிவெங்கடப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அசோக்குமார் எம்.எல்.ஏ. பேசுகையில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க.வினர் செய்த தவறுகளை தட்டி கேட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது தொடர்ந்து வழக்கு போடுவதை தி.மு.க. அரசு நிறுத்த வேண்டும் என்று பேசினார்.
இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, முன்னாள் நகர்மன்ற தலைவர் தங்கமுத்து, பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அம்சா ராஜன், ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் வெங்கடாசலம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஓசூர்
இதேபோன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார். மாவட்ட அவைத்தலைவர் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஓசூர் மாநகர செயலாளர் நாராயணன் வரவேற்றார்.
இதில், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ராமு, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் பிரிவு செயலாளர் சென்னகிருஷ்ணன், இலக்கிய அணி செயலாளர் இளஞ்செழியன், மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் குபேரன் என்ற சங்கர், ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணவேணி ராஜி மற்றும் ஓசூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிகுமார் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கட்சி நிர்வாகிகள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
========