வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் நகை ரூ1 லட்சம் திருட்டு
பொங்கலூரில் வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருடப்பட்ட வழக்கில் மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்
பொங்கலூர்
பொங்கலூரில் வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருடப்பட்ட வழக்கில் மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்
திருப்பூர் அருகே பொங்கலூர் எஸ்.ஏ.பி. கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 67). இவரது மனைவி சசிவர்ணம் (61). இவர்களது மகன்கள் கிருஷ்ணகுமார் (36), வசந்தகுமார் (32).
இவர்கள் 4 பேரும் நேற்று முன் தினம் மதியம் காரில் உடுமலை புறப்பட்டு சென்றனர். அப்போது கிருஷ்ணகுமார் மட்டும் கோவை செல்வதாகக் கூறி பல்லடத்தில் இறங்கிக் கொண்டார். இந்த நிலையில் இரவு சுமார் 11 மணியளவில் கோவையில் இருந்து பொங்கலூர் திரும்பிய கிருஷ்ணகுமார் வீட்டின் முன்பக்க கதவை திறந்து மாடியில் உள்ள அறையில் சென்று படுத்துக் கொண்டார். நேற்று காலை கிருஷ்ணகுமார் எழுந்து சமையலறை பக்கம் சென்றபோது அந்த பகுதியில் இருந்த கதவு உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் படுக்கையறையில் இருந்த கப்போர்டில் துணிகள், பொருட்கள் சிதறி கிடந்தன. உடனடியாக அவர் இது குறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த 16 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
மேலும் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி குடம் மற்றும் கொலுசு ஆகியவையும் திருட்டு போயிருந்தன. இது குறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் தடயங்களை சேகரித்தனர்.இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.