தியாகதுருகம் அருகே பரபரப்பு சமூக வலைதளத்தில் நண்பர் போல பழகி பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு 3 வாலிபர்கள் கைது

தியாகதுருகம் அருகே சமூக வலைதளத்தில் நண்பர் போல பழகி பெண்ணிடம் 11 பவுன் நகைகளை பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2022-02-28 17:52 GMT

கண்டாச்சிமங்கலம்

சமூக வலைதளம் மூலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி சங்கீதா(வயது 24). இவரும் கள்ளக்குறிச்சி அருகே ரோடு மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் செல்வம்(23) என்பவரும் சமூக வலைதளம் மூலம் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தனக்கு உடல்நிலை சரியில்லாததால் சங்கீதா சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது சங்கீதாவை செல்போனில் தொடர்பு கொண்ட செல்வம் சினிமா தியேட்டருக்கு வருமாறு அழைத்ததாக தெரிகிறது. 

நகைகள் பறிப்பு

பின்னர் செல்வம் சங்கீதாவை தனது மோட்டார் சைக்கிளில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திம்மலை பஸ் நிறுத்தம் அருகே உள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது செல்வம் மட்டும் தனியாக எழுந்து சென்று யாரோ மர்ம நபரிடம் செல்போனில் பேசிவிட்டு வந்து மீண்டும் சங்கீதாவை மோட்டார்சைக்கிளில் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். 

அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் செல்வத்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி சங்கீதாவிடம்  உள்ள நகைகளை கழற்றி தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் சங்கீதாவின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலி சங்கிலி, 2 பவுன் சங்கிலி மற்றும் ஒரு பவுன் சங்கிலி ஆக மொத்தம் 11 பவுன் நகையை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

3 பேர் கைது

பின்னர் இதுகுறித்து சங்கீதா தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இ்தில் செல்வத்தின் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் நண்பரை போல பழகி சங்கீதாவிடம் தனது நண்பர்கள் உதவியோடு அவரது கழுத்தில் கிடந்த நகைகளை பறித்தது தொியவந்தது. 

இதையடுத்து செல்வம், இவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் முத்தரசன்(24), சாமிதுரை மகன் பிரபு (21) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து 6 பவுன் நகைகளையும் மீட்டனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தியாகதுருகம் அருகே உள்ள நாகலூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்தை வலைவீசி தேடி வருகின்றனர். பெண்ணிடம் நண்பரை போல பழகி அவரது கழுத்தில் கிடந்த 11 பவுன் நகைகளை பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்