அடக்குமுறையை கண்டு பயப்படும் கட்சி அ தி மு க அல்ல

“அடக்குமுறையை கண்டு பயப்படும் கட்சி அ.தி.மு.க. அல்ல” என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறினார்

Update: 2022-02-28 17:29 GMT
திருப்பூர்
“அடக்குமுறையை கண்டு பயப்படும் கட்சி அ.தி.மு.க. அல்ல” என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறினார்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று காலை திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-
அடக்குமுறையை கண்டு பயப்படுகிற கட்சி அ.தி.மு.க. அல்ல. இந்த கட்சி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்சி. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிநடத்தும் கட்சி. நம்மை அடக்க, அடக்க திமிறி எழுவோமே தவிர ஒருபோதும் அடிபணிய மாட்டோம். 
நரேஷ் என்ற தி.மு.க. தொண்டரை அடித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு போட்டுள்ளனர். அந்த நரேஷ் மீது ஏற்கனவே 12 வழக்குகள் உள்ளன. இதில் திருட்டு வழக்கும் அடங்கும். நரேஷ் கள்ள ஓட்டு போட்டதற்காக அ.தி.மு.க.வினர் பிடித்துக்கொடுத்துள்ளனர். ஆனால் ஜெயக்குமார் மீது இத்தனை வழக்குகளை ஜோடித்து போட்டுள்ளனர். காவல்துறை ஏவல் துறையாகி விட்டது. அ.தி.மு.க.வினர் தைரிய புருஷர்கள். என்றைக்கும் அஞ்சமாட்டோம். அ.தி.மு.க.வை காப்பதற்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன் (பல்லடம்), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), முன்னாள் எம்.பி. சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், கரைப்புதூர் நடராஜன், அம்மா பேரவை மாநில இணை செயலாளர் கே.ஜி.முத்து வெங்கடேஷ்வரன், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி, காங்கேயம் ஒன்றிய செயலாளர் என்.எஸ்.என்.நடராஜ், மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் வக்கீல் பா.சு.மணி, மாநகர் மாவட்ட கலைப்பிரிவு தலைவர் கனிஷ்கா சிவக்குமார், 38-வது வட்ட செயலாளர் ஆண்டிப்பாளையம் ஆனந்தன் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி, கிளை செயலாளர்கள், சார்புஅணி அமைப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்