அரசு கல்லூரிக்கு கட்டிடம் கட்டக்கோரி ரிஷிவந்தியத்தில் கிராம மக்கள் திடீர் உண்ணாவிரதம்
அரசு கல்லூரிக்கு கட்டிடம் கட்டக்கோரி ரிஷிவந்தியத்தில் கிராம மக்கள் திடீர் உண்ணாவிரதம்
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் அரசு கலை, அறிவியல் கல்லூரியானது பகண்டை கூட்டுரோடு அருகே உள்ள அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு பகுதியில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. 2 ஆண்டுகளை கடந்த பின்னரும் இன்னமும் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டப்படாததால் போதிய வசதிகள் இன்றி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரிஷிவந்தியம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று காலை ரிஷிவந்தியம் சனிமூலை பஸ் நிறுத்தம் அருகே திடீரென உண்ணாவிரத போரட்டம் நடத்தினர். அப்போது ரிஷிவந்தியம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மற்றும் ரிஷிவந்தியம் போலீசார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த கோரிக்கையை மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு எடுத்து சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தனர். இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.