புதிய கவுன்சிலர்கள் நாளை பதவி ஏற்பு
உடுமலை நகராட்சி அலுவலகத்தில், புதிய கவுன்சிலர்கள் நாளை பதவி ஏற்க உள்ள நிலையில் கூட்ட அரங்கத்தை தயார் படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
உடுமலை
உடுமலை நகராட்சி அலுவலகத்தில், புதிய கவுன்சிலர்கள் நாளை பதவி ஏற்க உள்ள நிலையில் கூட்ட அரங்கத்தை தயார் படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
உடுமலை நகராட்சி
உடுமலை நகராட்சி ஆரம்பிக்கப்பட்டு 104 ஆண்டுகள் ஆகிறது. இந்த நகராட்சி அலுவலகம் 1941-ம் ஆண்டு முதல் தளி சாலையில் உள்ள தாகூர் மாளிகையில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த அலுவலக வளாகத்தில் புதியதாக நகராட்சி அலுவலகம் கட்டப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த புதிய கட்டிடத்தில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த புதிய அலுவலகத்தில் தரைத்தளம், முதல் தளம், 2-வது தளம் ஆகிய 3 தளங்கள் உள்ளன. தரைத்தளத்தில் சுகாதார பிரிவு, நகர்நல அலுவலர் அறை, பொதுமக்கள் வரி செலுத்தும் அறை, கணினி அறை உள்ளிட்டவையும், முதல் தளத்தில் ஆணையாளர், பொறியாளர், நகரமைப்பு அலுவலர் ஆகியோரது அறைகள் மற்றும் நிர்வாக பிரிவு, பொறியியல் பிரிவு, நகரமைப்பு பிரிவு ஆகியவையும் செயல்பட்டு வருகின்றன.
கூட்ட அரங்கம்
2-வது தளத்தில் நகராட்சி தலைவர் அறை மற்றும் கூட்ட அரங்கம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ம்தேதி நகராட்சி தேர்தல் நடந்து வாக்கு எண்ணிக்கை 22-ம்தேதி நடந்தது.
உடுமலை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் இந்த வார்டுகளில் போட்டியிட்டு கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், இந்த அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நாளை (புதன்கிழமை) பதவி ஏற்க உள்ளனர். நகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, கூட்ட அரங்கிற்கு தேவையான டேபிள், சேர் உள்ளிட்ட தளவாட பொருட்கள் வாங்கப்பட்டு கூட்ட அரங்கை தயார் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த அரங்கில் தலைவர் அமரும் மேடை அமைக்கப்பட்டுள்ளது. வார்டு கவுன்சிலர்கள் உட்காருவதற்கு பிரம்மாண்டமான மேஜை வடிவமைக்கப்பட்டு அந்த அறையில் தலைவர் இருக்கை உள்ள மேடையின் முன்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. தலைவரின் மேஜை மற்றும் ஒவ்வொரு கவுன்சிலர் உட்காரும் இருக்கைக்கு முன்பும் மேஜைகளில், ஒரு ஒலிபெருக்கி, பொருத்தப்பட உள்ளது. தலைவர் இருக்கை உள்ள மேடையின் பக்கவாட்டில் அதிகாரிகள் உட்காருமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்ட அரங்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.