தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க போலீஸ்காரருக்கு 3 நாள் ஜாமீன்
தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க போலீஸ்காரருக்கு 3 நாள் ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களை தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது.
அப்போது, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 9 போலீசார், இந்த வழக்கில் கைதாகி மதுரை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் போலீஸ்காரர் சாமதுரையும் ஒருவர். அவருடைய தாயார் மருதகனி நேற்று இறந்துவிட்டார். அவரது இறுதிச்சடங்கில் சாமதுரை பங்கேற்க அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு நேற்று அவசர மனுவாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சாமதுரைக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.