தொழிலாளி அடித்துக்கொலை
திருத்துறைப்பூண்டி அருகே தொழிலாளியை அடித்துக்கொன்ற தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே தொழிலாளியை அடித்துக்கொன்ற தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மணலியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது28). மெக்கானிக். இவர் மணலி கடைத்தெருவில் ஒரு நபரிடம் அவரது செல்போனை வாங்கினார்.
இந்த செல்போனை குரும்பல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த தொழிலாளி பாரதிமோகன் (42) என்பவரிடம் ரூ.700-க்கு அடமானம் வைத்துள்ளார்.
பாரதிமோகன் வைத்திருந்த செல்போனை பார்த்த நபர் இது என்னுடைய செல்போன் என கூறியுள்ளார். அதற்கு பாரதிமோகன் இந்த செல்போனை ராஜ்குமார் என்னிடம் அடகு வைத்துள்ளார் என்றார்.
மேலும் அந்த செல்போனை அந்த நபரிடம் பாரதிமோகன் கொடுத்துள்ளார். பின்னர் ராஜ்குமார் வீட்டுக்கு சென்ற பாரதிமோகன் அவரை தகாத வார்த்தையில் திட்டினார்.
உருக்கட்டையால் தாக்குதல்
இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், அவரது தம்பி பாலமுருகன் (23), அவரது தாய் ரேணுகாதேவி (45) ஆகியோர் கடந்த 24-ந்தேதி பாரதிமோகன் வீட்டிற்கு சென்று அவரை உருட்டுக்கட்டையால் தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாரதிமோகன் உயிரிழந்தார்.
தாய், மகன் கைது
இதுகுறித்து பாரதிமோகனின் தம்பி முருகேசன் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து பாரதிமோகனை அடித்துக்கொன்ற பாலமுருகன், ரேணுகாதேவி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதில் தொடர்புடைய ராஜ்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தொழிலாளியை அடித்துக்கொன்ற தாய்-மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
---