‘உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கிறோம்’
உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் தவிக்கிறோம் என உக்ரைனில் சிக்கி தவிக்கும் மன்னார்குடி மாணவி ஹரிணி தனது பெற்றோரிடம் கதறி அழுதார்.;
மன்னார்குடி:
உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் தவிக்கிறோம் என உக்ரைனில் சிக்கி தவிக்கும் மன்னார்குடி மாணவி ஹரிணி தனது பெற்றோரிடம் கதறி அழுதார்.
தமிழக மாணவர்கள் தவிப்பு
ரஷியா-உக்ரைன் இடையே போர் மூண்டு உள்ளதால் உக்ரைனில் மருத்துவம் படிக்்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகிறார்கள். அடிப்படை வசதிகள் இன்றி உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவ-மாணவிகளை மீட்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழராஜ வீதியை சேர்ந்த ஆனந்தவேலன்-ரேவதி ஆகியோரின் மகள் ஹரிணி. இவர் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
காமராஜ் எம்.எல்.ஏ. ஆறுதல்
உக்ரைனில் கார்கிவ் பகுதியில் சக மாணவர்களுடன் மாணவி ஹரிணி வசித்து வருகிறார். தொடர்ந்து 5-வது நாளாக உக்ரைனில் போர் நீடித்து வரும் நிலையில் அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
மன்னார்குடி மாணவி ஹரிணி உக்ரைனில் சிக்கி தவித்து வருவது குறித்து அறிந்த முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. நேற்று மாணவி ஹரிணியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோரை சந்தித்து மாணவியின் நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் மாணவி ஹரிணியுடன் வீடியோ கால் மூலம் பேசிய காமராஜ் எம்.எல்.ஏ., மாணவிக்கு ஆறுதல் கூறினார்.
பெற்றோரிடம் மாணவி கதறல்
அப்போது மாணவி ஹரிணி தனது பெற்றோரிடம் கதறி அழுதார். அவர் பேசும்போது, , உக்ரைனில் கார்கிவ் பகுதியில் போர் நடைபெறுவதால் வங்கிகள், ஏ.டி.எம். உள்ளிட்ட அனைத்து விதமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் தவித்து வருகிறோம். கார்கிவ் பகுதியில் நடந்து வரும் உக்கிரமான தாக்குதலால் பாதுகாப்பு கருதி நாங்கள் கடந்த 2 நாட்களாக குடியிருப்புகளின் கீழ் தளங்களில்(அண்டர் கிரவுண்டு) பகுதியில் இருந்து வருகிறோம். எனவே என்னைப்போன்று உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க மத்திய அரசும், தமிழக அரசும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
-----------