பிஏபி வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
பி.ஏ.பி. வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி
பி.ஏ.பி. வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சப்-கலெக்டரிடம் மனு
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.
அப்போது ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன நலச்சங்க விவசாயிகள் கழிவுநீர் கலந்த தண்ணீரை பாட்டிலில் எடுத்து வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பி.ஏ.பி. வாய்க்காலில் கழிவுநீர்
பொள்ளாச்சி அருகே திம்மங்குத்துவில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனம் குளிர்பானங்கள் தயாரிக்க அமைக்கப்பட்ட தாக தெரியவந்தது.
இதனால் குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனம் நிலத்தடி நீரை உறிஞ்சி விடும் என்பதாலும், கழிவுகளை கலந்து நிலத்தடி நீர்மட்டம் கெட்டுவிடும் என்றும் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனு கொடுத்தோம்.
இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி நிறுவனத்தின் அருகில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் துர்நாற்றம் வீசுவதாக விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது வாய்க்காலில் தார் போன்ற நிறத்தில் கழிவுகள் துர்நாற்றத்துடன் தேங்கி கிடந்தன.
அருகில் உள்ள நிறுவனத்தில் இருந்து குழாய் மூலம் வாய்க்காலில் கழிவை கலந்து உள்ளனர்.
தடை விதிக்க வேண்டும்
நிறுவனத்திற்கு அனுமதி வாங்கும் போது நிலத்தடி நீரை உறிஞ்ச மாட்டோம் என்று சொல்லி அனுமதி பெற்று விட்டு தற்போது அனுமதிக்கு மாறாக நிலத்தடி நீரை உறிஞ்சி குளிர்பானங்களை தயாரிக்கின்றனர்.
இதை தவிர ஆழ்துளை கிணறு அமைத்து நிறுவனத்தில் இருந்து வரும் கழிவுகளை நிலத்தடியில் செலுத்தி விடுகின்றனர். இதன் காரணமாக சுற்றி உள்ள பகுதிகளில் தண்ணீர் உவர்ப்பாக மாறிவிட்டது.
எனவே பி.ஏ.பி. வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதுடன், அனுமதியை மீறி செயல்படும் அந்த தொழிற்சாலைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.