பொள்ளாச்சி அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற லாரி விபத்தில் சிக்கியது
பொள்ளாச்சி அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற லாரி விபத்தில் சிக்கியது. அதில் இருந்த 20 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற லாரி விபத்தில் சிக்கியது. அதில் இருந்த 20 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
விபத்தில் சிக்கிய லாரி
பொள்ளாச்சி-மீன்கரை ரோட்டில் ஆலாங்கடவு பிரிவில் ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் விபத்தில் சிக்கி நின்றது. அந்த லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோபிநாத், ஆனைமலை குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரி முருகராஜ் மற்றும் போலீசார், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் அந்த லாரியில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
ரேஷன் அரிசி
அப்போது அவர்கள் திண்டுக்கல், தேனி பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு மாட்டுத்தீவனம் ஏற்றிக்கொண்டு செல்வதாக கூறினார்கள். ஆனால் அவர்கள் அளித்த பதிலால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனே போலீசார் அந்த லாரியில் இருந்த மூட்டைகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் கோதுமை மூட்டைகளுடன் சில மூடைகள் இருந்தன. அந்த மூட்டைகளை போலீசார் திறந்து பார்த்தபோது அவை அனைத்தும் ரேஷன் அரிசி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
2 பேர் கைது
இதை தொடர்ந்து போலீசார் அந்த 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், கேரளாவை சேர்ந்த அருண்ராஜ், திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திகேயன் என்பதும், திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்ததுடன், அந்த லாரியில் இருந்த 20 டன் ேரஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தேனியை சேர்ந்த விவேக், கேரளா முனீர் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தீவிர கண்காணிப்பு
திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்ட அந்த லாரி பல சோதனை சாவடிகளை கடந்து பொள்ளாச்சிக்கு வந்தபோது விபத்தில் சிக்கி இருக்கிறது. இதனால்தான் அதில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. விபத்தில் லாரி சிக்கவில்லை என்றால் கேரளாவுக்கு எளிதாக சென்று இருக்கும்.
எனவே அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.