ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல்லில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்தது
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல்லில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல்:
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல்லில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் கள்ள ஓட்டு போட்ட தி.மு.க.வை சேர்ந்த நபரை கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்ததற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் ஜாமீனில் வெளியே வந்தால், உண்மை தெரிந்து விடும் என்பதால் மேலும் பொய் வழக்குகளை அவர் மீது போட்டு வருகின்றனர். இதை கண்டித்து தான் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
விவிபேட் எந்திரம்
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் மாநில தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ளது. அது தி.மு.க.வின் கைபாவையாக இருப்பதால், வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு செய்து வெற்றியை பெற்றுள்ளனர். நேர்மையாக தேர்தல் நடந்திருந்தால், நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை காட்டும் விவிபேட் எந்திரத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும். கள்ள ஓட்டு போடுவதற்காக அவர்கள் விவிபேட் எந்திரத்தை பயன்படுத்தவில்லை. மாலை 5 மணி முதல் 6 மணிவரை கொரோனா நோயாளிகள் ஓட்டு போடுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரம். அந்த நேரத்தில் தி.மு.க.வினர் கள்ள
ஓட்டுகளை போட்டுள்ளனர்.சென்னையில் கள்ள ஓட்டுப்போட முயன்றவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு உள்ளார். இன்னும் எத்தனை பேரை கைது செய்தாலும், அ.தி.மு.க.வினர் யாரும் பயப்பட மாட்டார்கள்.
மிகப்பெரிய வெற்றி பெறும்
கடந்த 1996-ம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. ஆனால் 2 ஆண்டு கழித்து 1998-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க பெருவாரியாக வெற்றி பெற்றது. அதே நிலைதான் தற்போதும் உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றியை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சேவல் ராஜூ, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சாரதா, முன்னாள் எம்.எல்.ஏ. கலாவதி, பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முரளி பாலுசாமி, ஒன்றிய செயலாளர்கள் சேகர், கோபிநாத், ராஜா என்கிற செல்வகுமார், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் சுரேஷ்குமார், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் விஜய்பாபு மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணியினர், மகளிர் அணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.