தேனி அருகே மலைப்பகுதியில் பயங்கர தீ
தேனி அருகே மலைப்பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிகிறது. அதனை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.;
தேனி:
தேனி அருகே மலைப்பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிகிறது. அதனை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
மலைப்பகுதியில் பயங்கர தீ
தேனி அருகே பூதிப்புரம் மரக்காமலை வனப்பகுதி மற்றும் போடி அருகே அணைக்கரைப்பட்டி மலைப்பகுதி ஆகிய இடங்களில் நேற்று மாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி வனச்சரகர் சாந்தகுமார் தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்தனர்.
தீயை அணைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். ஆனால், தீ கட்டுக்குள் வராமல் வேகமாக பரவியது. பல ஏக்கர் பரப்பளவில் தீ பரவியது. தொடர்ந்து நேற்று இரவில் தீ பரவும் வேகம் மேலும் அதிகரித்தது.
தீயை அணைக்கும் பணியில் தொய்வு
தேனி, பூதிப்புரம் பகுதிகளில் மக்கள் வீடுகளில் இருந்தும், சாலைகளில் நின்றும் மலையில் தீப்பற்றி எரிவதை பார்த்து வேதனை அடைந்தனர். இந்த மலைப்பகுதிகளில் உயரமான புற்கள் அதிக அளவில் இருக்கும்.
வெயில் காரணமாக அவை காய்ந்து இருப்பதால் தீ வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்த மலைப்பகுதியில் தீத்தடுப்பு பாதை பராமரிப்பு இன்றி புதர்மண்டிக் கிடப்பதாக கூறப்படுகிறது. இதனால், தீயை அணைக்கும் பணிக்கு வனத்துறையினர் முன்னேறிச் செல்ல முடியாமல் தீயணைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தீத்தடுப்பு பாதை
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "இந்த தீ இயற்கையாக உருவானது போல் தெரியவில்லை. மனிதர்களால் வைக்கப்பட்டதாக கருதுகிறோம். இந்த மலைப்பகுதியில் பழமையான மரங்கள் எதுவும் இல்லை. புற்கள் தான் அதிக அளவில் வளர்ந்து உள்ளன. மலைப்பகுதியில் தீத்தடுப்பு பாதை முக்கியமானது. தீ ஏற்பட்டால் இந்த பாதையை கடந்து வனத்தின் மற்றொரு பகுதிக்கு தீ பரவுவதை இது தடுக்கும். தீயணைப்பு பணிக்கு செல்வதற்கும் இந்த பாதை பயன்படும். இந்த தீத்தடுப்பு பாதையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஆட்கள் பற்றாக்குறையும் உள்ளது" என்றார்.