தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து, தூத்துக்குடியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2022-02-28 15:47 GMT
தூத்துக்குடி:
தி.மு.க. அரசை கண்டித்து, தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில், தி.மு.க. அரசை கண்டித்து, தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ பேசியதாவது:-
கள்ள ஓட்டு போட்டவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து போலீசில் ஒப்படைத்து உள்ளார். ஜனநாயகத்தை காக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளார். அவரை தமிழக அரசு கைது செய்து உள்ளது. தற்போது சட்டத்தை மீறும் ஆட்சி நடக்கிறது. இதனை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்வதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆட்சியில் இருந்து இறக்குவோம்
ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பேசும்போது, “என் மீதும் போலீசை வைத்து பொய் வழக்கு போடுவதாக மிரட்டுகிறார்கள். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களை ஜெயிலில் போட்டு விட்டால் அ.தி.மு.க.வை அழித்து விடலாம் என்று தி.மு.க. தலைவர் நினைக்கிறார். அவரது எண்ணம் பலிக்காது.
அ.தி.மு.க. தோற்றுவிடவில்லை. நாம் தனியாக நின்று தி.மு.க.வுக்கு சவால் விட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இதுபோன்ற நிலை நீடித்தால், நீங்கள் ஆட்சியில் நீடிக்க முடியாது. தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்தி ஆட்சியில் இருந்து இறக்குவோம்” என்று கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹென்றி, இளைஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்