மராட்டியம், டெல்லிக்கு தலை வணங்காது- மந்திரி ஆதித்ய தாக்கரே பேச்சு

மராட்டியம், டெல்லிக்கு தலை வணங்காது என மந்திரி ஆதித்ய தாக்கரே பேசி உள்ளார்.

Update: 2022-02-28 15:09 GMT
படம்
மும்பை, 
மராட்டியம், டெல்லிக்கு தலை வணங்காது என மந்திரி ஆதித்ய தாக்கரே பேசி உள்ளார்.

டெல்லிக்கு தலை வணங்காது

மும்பையில் நேற்று முன்தினம் நடந்த மராத்தி தின நிகழ்ச்சியில் மந்திரி ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-  
மராத்தி மொழி ஒருபோதும் டெல்லி ஆட்சியாளர்களுக்கு அடி பணிந்தது இல்லை. இன்றும் கூட மராத்தி, டெல்லிக்கு தலை வணங்காது. மும்பையின் முக்கியத்துவத்தை குறைக்க பல்வேறு விஷயங்கள் டெல்லிக்கு மாற்றப்பட்டாலும் மராட்டியம், டெல்லி முன் தலை வணங்காது. மத்தியில் இருப்பவர்கள் எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அதை பற்றி கவலையில்லை.

தோ்தல் வரை தான்...

அரசியலுக்காக சிவசேனா கவுன்சிலர் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. பா.ஜனதாவின் பிரசாரம் தொடங்கி உள்ளது. மத்திய முகமைகளின் இந்த நடவடிக்கைகள் எல்லாம் தேர்தல் வரை தான் என்பது இன்று மராட்டியர்கள் எல்லோருக்கும் தெரியும். அவர்கள் மத்திய அரசு மூலம் எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறார்களோ அதற்கு மேல் மராட்டியம் ஒன்றுபட்டு மகாவிகாஸ் அகாடியுடன் நிற்கும். 
மந்திரி சுபாஷ் தேசாய் மராத்தியை கட்டாயமாக்கி உள்ளார். நாங்கள் மராத்தி மொழி வாரியம், நூலகத்தை அமைத்து வருகிறோம். 
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்