அ.தி.மு.க.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் கவுன்சிலர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-28 13:52 GMT
திருவண்ணாமலை

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சரான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.வரவேற்றார். ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ.தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். 

அப்போது அவர் பேசுகையில், ‘‘அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் மீது தி.மு.க. அரசு பொய் வழக்கை போட்டு வருகிறது. அ.தி.மு.க. எந்த பயமுறுத்தலையும் கண்டு அஞ்சுகின்ற இயக்கம் அல்ல. இன்று தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறவில்லை. மன்னர் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. ஜனநாயக முறையில் தேர்தலில் பணியாற்றி கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல் துறை மூலம் வெளியில் ஜாமினில் வர முடியாத அளவிற்கு பல்வேறு பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

சட்டமன்ற தேர்தல்

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தினுடைய சட்டமன்ற தேர்தலும் நடைபெறுவதற்கான சூழலும் உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நிலவரம் குறித்து எடுத்துரைப்பதற்காக ஆளுநர் பல்வேறு கோப்புகளுடன் டெல்லிக்கு சென்று இருக்கிறார். அரசு அதிகாரிகள் சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்தும், அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போட்டு வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணியன், எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட அவைத் தலைவர் நாராயணன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் குணசேகரன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனி, இலக்கிய அணி செயலாளர் பர்குணகுமார், துணை செயலாளர் அமுதா அருணாச்சலம் உள்பட மாவட்ட, சார்பு அணி, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

முடிவில் நகர செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.

தீக்குளிக்க முயற்சி

ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த நிலையில் திருவண்ணாமலை முன்னாள் நகரமன்ற கவுன்சிலரான கீழ்நாத்தூர் பகுதியை சேர்ந்த அன்பழகன் (வயது 61) என்பவர் திடீரென ஆர்ப்பாட்டத்திற்காக அமைக்கப்பட்டு இருந்த மேடையின் அருகில் வைத்து உடலில் பெட்ரோல் ஊற்றி கொண்டு தீக் குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த அ.தி.மு.க. வினர் அவரை மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

அப்போது அவர், கைது செய்யப்பட்டு உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விடுதலை செய்ய வேண்டும். நான் 19-வது வார்டில் போட்டியிட்ேடன். என்னைஎதிர்த்து போட்டியிட்ட நபர் கள்ள ஓட்டு போட்டு வெற்றி பெறறு விட்டார். 
இதற்கு எதிர்ப்பு தெரித்து தீக்குளிக்க முயன்றதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை அ.தி.மு.க.வினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது/

மேலும் செய்திகள்