நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் இடையே நடுரோட்டில் அரசு பஸ் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
கோத்தகிரி
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் இடையே நடுரோட்டில் அரசு பஸ் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
பழுதாகி நின்ற பஸ்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு தேவைகளுக்காக சமவெளி பகுதிக்கு ஏராளமான பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வழக்கம்போல் அரசு பஸ் இயக்கப்பட்டது. குஞ்சப்பனை அருகே சென்றபோது திடீரென நடுரோட்டில் அரசு பஸ் பழுதாகி நின்றது.
அவதி
அந்த பகுதியில் அடிக்கடி காட்டுயானைகள் நடமாடி வருவதுடன், வாகனங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. மேலும் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி கொண்ட சாலையில் பஸ் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பீதி அடைந்தனர். இது தவிர அந்த வழியாக மற்றொரு பஸ் வர நீண்ட நேரம் ஆனதால், அவதி அடைந்தனர்.
அதன்பிறகு வந்த பஸ்களில் பயணிகள் ஏற்றி மேட்டுப்பாளையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து பயணிகள் கூறும்போது, வனப்பகுதி வழியாக செல்லும் அரசு பஸ்களை உரிய முறையில் பராமரித்து இயக்கவோ அல்லது புதிய பஸ்களை இயக்கவோ அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.