உக்ரைனில் சிக்கியுள்ள காயல்பட்டினம் மருத்துவ மாணவரை மீட்க வேண்டும்: பெற்றோர் கோரிக்கை
உக்ரைனில் சிக்கியுள்ள காயல்பட்டினம் மருத்துவ மாணவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் கோரிக்கை மனு கொடுத்தனர்
தூத்துக்குடி:
உக்ரைன் நாட்டில் சிக்கி உள்ள காயல்பட்டினம் மருத்துவ மாணவரை மீட்க கோரி பெற்றோர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கொரோனா வைரஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்து வந்தது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவிலலை. இதனால் பொதுமக்கள் மனுக்களை செலுத்துவதற்கு வசதியாக நுழைவு வாயிலில் ஒரு பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர்.
மீட்க வேண்டும்
நேற்று மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். அதன்படி காயல்பட்டினத்தை சேர்ந்த சம்சுதீன், குடும்பத்தினருடன் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர்கள் கண்ணீர் மல்க கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எனது மகன் அகமது கைப் (வயது 18), உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு முதலாமாண்டு படித்து வருகிறார். அவர் உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்யா எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ளார்.அவருடன் 55 பேர் தங்கி உள்ளனர். தற்போது விடுதியில் உள்ள பதுங்கு குழியில் தங்கி உள்ளனர். நேற்று நள்ளிரவு தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது, உணவு கிடைக்காமல் சிரமப்படுவதாகவும், அந்த பகுதியில் சண்டை நடப்பதாகவும், அவ்வப்போது குண்டு விழுவதாகவும், அருகில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும் கூறினார். பின்னர் அழைப்பதாக கூறினார். ஆனால் அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆகையால் எனது மகனை பத்திரமாக மீட்டு நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இழப்பீடு
அகில இந்திய விவசாயிகள் மகாசபை சண்முக பெருமாள், அகில இந்திய கிராமப்புற விவசாய தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த சேர்மன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், விளாத்திகுளம் தாலுகா மேல்மாந்தை பகுதியில் பிரதானமாக நெல், மிளகாய் விவசாயம் நடந்து வந்தது. அந்த பகுதியில் தனியார் உப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு, அதனை சுற்றி உள்ள சுமார் 650 ஏக்கர் நிலம் உவர் நிலமாக மாறி உள்ளது. இதனால் பயிர்கள் கருகி விட்டன. எனவே ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், நிலத்தை விவசாயம் செய்வதற்கு ஏற்ற நல்ல மண்ணாக மாற்றித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
தர்ணா போராட்டம்
தூத்துக்குடி அருகே உள்ள சேர்வைக்காரன் மடத்தை சேர்ந்த ஜெயா மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், எனது குடும்பத்துக்கு பாத்தியப்பட்ட 40 சென்ட் இடம் சேர்வைக்காரன் மடத்தில் உள்ளது. இந்த நிலத்தை முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட சிலர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்து உள்ளனர். ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
மீன் விற்பனை
தூத்துக்குடி மீன் வியாபாரிகள் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி காமராஜ் மார்க்கெட் அருகே மீன் விற்பனை செய்து வந்தோம். அங்கு மீன்விற்பனை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். தற்போது 3 குடும்பங்கள் மட்டும் மீன் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. ஆகையால் நாங்கள் வறுமையால் வாடும் சூழல் உள்ளது. ஆகையால் அந்த பகுதியில் 15 குடும்பத்தினரும் மீன்வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
இலவச பட்டா
காயல்பட்டினம் தேங்காய் பண்டகசாலை பகுதியை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எங்கள் தெருவில் 35 குடும்பத்துக்கு அரசால் இலவச பட்டா வழங்கப்பட்டது. அந்த பகுதிகள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் எங்கள் நிலத்தை மீட்டு அளந்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.