வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை கொள்ளை
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி 16 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
மர்ம நபர்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் ஆண்டி தாங்கள் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி லட்சுமி காந்தம் (வயது 66). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் வெங்கடசுப்பு சென்னையிலும் மகள் அமெரிக்காவிலும் உள்ளனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணன் இறந்துவிட்டார். இதனால் லட்சுமி காந்தம் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் இவரது வீட்டின் பின்பக்கம் கதவை உடைத்து 3 மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர்.
கொள்ளை
பின்னர் லட்சுமி காந்தத்தை கத்தியை காட்டி மிரட்டி பீரோ சாவியை வாங்கி உள்ளனர். பின்னர் பீரோவைத் திறந்த மர்ம நபர்கள் அதில் இருந்த 16 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியையும் பறித்துகொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்ஸ்பெக்டர் நிவாஸ் தலைமையில் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.