வழிப்பறியில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது; தாம்பரம் மாநகர கமிஷனர் உத்தரவு
வழிப்பறியில் கைதான 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தாம்பரம் மாநகர கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.;
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 20). இவர் நாவலூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் (20), ராஜீ (19), ஹரிஷ் (25), ராஜேஷ் (20) மற்றும் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (25) ஆகிய 5 பேருடன் சேர்ந்து படப்பை ஆரம்பாக்கம் அருகே வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்தார்.
இவர்கள் 6 பேரையும் கடந்த 12-ந் தேதியன்று மணிமங்கலம் போலீசார் கைது செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் வினோத், சுரேஷ், ராஜீ, பார்த்திபன், மற்றும் ஹரிஷ், ஆகிய 5 பேர் மீதும் மணிமங்கலம், ஒரகடம், சென்னை, கூடுவாஞ்சேரி, உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவிட்டுள்ளார்.