போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து போலீஸ்காரரை தாக்கிய வாலிபர்
போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து போலீஸ்காரரை தாக்கிய வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி விசாரித்தனர். அப்போது ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்றொருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கி கொண்டார்.
விசாரணையில் அவர், நுங்கம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 19) என்பதும், தனது நண்பருடன் சேர்ந்து அந்த மோட்டார் சைக்கிளை மதுரவாயலில் இருந்து திருடி வந்ததாகவும் தெரிவித்தார். இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மதுரவாயல் போலீசார், மோட்டார்சைக்கிளை திருடிய வெங்கடேசனை கைது செய்தனர். பின்னர் அவர் தங்கி உள்ள அறையில் சோதனை செய்ய அவரை அழைத்துச் சென்றனர்.
அப்போது வெங்கடேசன், திடீரென போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து தனது கழுத்தில் வைத்து கொண்டு கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். அதனை தடுக்க முயன்ற போலீஸ்காரர் ஒருவரின் கையை கண்ணாடியால் கிழித்து விட்டு தப்பி ஓடமுயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய அவரது நண்பரையும் தேடி வருகின்றனர்.