மேகதாது திட்டத்தை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துவது சரியல்ல - மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கண்டனம்

மேகதாது திட்டத்தை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துவது சரியல்ல என்று கூறி மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி காங்கிரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-27 21:31 GMT
பெங்களூரு:

  மத்திய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நீர் பங்கீட்டு பிரச்சினை

  சித்தராமையா முன்பு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பல்லாரிக்கு பாதயாத்திரை சென்றார். அதன் பிறகு அவர் முதல்-மந்திரி ஆனார். அதே போல் நாமும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று கருதி டி.கே.சிவக்குமார் மேகதாது பாதயாத்திரையை தொடங்கி நடத்துகிறார். ஆனால் இது நடைபெறாது. ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் தலைவர்கள் மேகதாது திட்டத்தை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  ஆட்சியில் இல்லாதபோது அந்த திட்டத்தை செயல்படுத்த கோரி பாதயாத்திரை நடத்துகிறார்கள். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் மேகதாது திட்டத்தை அமல்படுத்த மாட்டார்கள். 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கு பிறகும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே இருக்கும். மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீட்டு பிரச்சினை என்பது ஒரு சிக்கலான விஷயம்.

காங்கிரசின் நிலைப்பாடு

  இதை அரசியல் நோக்கத்திற்காக காங்கிரஸ் பயன்படுத்துவது சரியல்ல. அவர்கள் நடத்தும் பாதயாத்திரையை கண்டிக்கிறேன். மகதாயி விஷயத்தில் கோவா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஒரு சொட்டு நீர் கூட கர்நாடகத்திற்கு வழங்க மாட்டோம் என்று கூறப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கர்நாடக காங்கிரசின் நிலைப்பாடு என்ன என்பதை இங்குள்ள அக்கட்சியின் தலைவர்கள் கூற வேண்டும். மேகதாது திட்ட விஷயத்தில் நாங்கள் சட்ட ரீதியாக செயல்பட்டு கர்நாடகத்தின் நீர் பங்கீட்டை பெறுவோம்.
  இவ்வாறு பிரகலாத்ஜோஷி கூறினார்.

மேலும் செய்திகள்