ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
போலியோ சொட்டு மருந்து
நாடு முழுவதும் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் 1,400 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்து 533 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டது. மேலும், வீடு, வீடாக சென்றும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
2 லட்சம் குழந்தைகள்
ஈரோடு பஸ் நிலையத்தில் நடந்த முகாமை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், “5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 1,400 மையங்களில் 2 லட்சத்து 816 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது”, என்றார். இதில் ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி., மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.