சிவகிரியில் பயங்கரம்: தொழிலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி மது குடித்துவிட்டு தகராறு செய்ததால் ஆத்திரம்
சிவகிரியில் தொழிலாளி பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
சிவகிரி:
சிவகிரியில் தொழிலாளி பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கட்டிட தொழிலாளி
தென்காசி மாவட்டம் சிவகிரி மேலவீதி 2-ம் தெருவைச் சேர்ந்தவர் சித்திரை தேவர் மகன் பரமசிவன் என்ற துரை (வயது 36). கட்டிட தொழிலாளி. இவருக்கு முத்துமாரி (30) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
பரமசிவனுக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தார். மேலும் பரமசிவன் தனது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
உயிரோடு எரிப்பு
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரமசிவன் அளவுக்கு அதிகமாக மதுக்குடித்து விட்டு, ஊருக்கு மேற்கே உள்ள வனத்துறை அலுவலகம் அருகே கிடந்தார். இதை அறிந்த முத்துமாரி அங்கு சென்றார். பின்னர் அவர் தனது கணவரை எழுப்பி பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது, அவர்களுக்கு இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துமாரி தான் பாட்டிலில் மறைத்து வைத்து இருந்த ெபட்ரோல், மண்எண்ணெய் ஆகியவற்றை தனது கணவர் என்றும் பாராமல் பரமசிவன் மீது ஊற்றி, தீவைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் முத்துமாரி அங்கிருந்து சென்றுவிட்டார்.
பரிதாப சாவு
உடலில் பற்றி எரிந்த தீயால் பரமசிவன் அலறித்துடித்தார். அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்து மணல், தண்ணீரால் தீயை அணைத்தனர்.
இதுகுறித்து உடனடியாக சிவகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய பரமசிவனை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கும், பின்னர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரமசிவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி கைது
இந்த கொலை தொடர்பாக சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துமாரியை கைது செய்தனர். பின்னர் அவரை சிவகிரி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பிரியங்கா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வழக்கை நீதிபதி விசாரித்து, முத்துமாரியை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிவகிரியில் தொழிலாளியை பெட்ரோல் ஊற்றி அவரது மனைவியே எரித்துக் கொன்ற பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.