ஈரோட்டில் மர்ம சாவு வழக்கில் திருப்பம் 2 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை; குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
ஈரோட்டில் மூதாட்டி மர்மசாவு வழக்கில், 2 பவுன் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு
ஈரோட்டில் மூதாட்டி மர்மசாவு வழக்கில், 2 பவுன் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மூதாட்டி சாவு
ஈரோடு சென்னிமலை ரோடு மணல்மேடு முத்துகுமாரசாமி வீதியை சேர்ந்தவர் கருப்பணன். இவருடைய மனைவி முத்தாயம்மாள் (வயது 80). இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 22-ந் தேதி மதியம் வீட்டில் முத்தாயம்மாள் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், மூதாட்டியின் உடலில் காயங்கள் இல்லாமல் இருந்தது. ஆனால் அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தபடி காணப்பட்டது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து முத்தாயம்மாளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கு தடயவியல் நிபுணர்கள் சென்று மர்மநபர்களின் கைரேகைகள் உள்ளதா? என்று சோதனை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது.
கொலை
போலீசாரின் விசாரணையில் முத்தாயம்மாள் அணிந்திருந்த 2 பவுன் நகை மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் சந்தேக மரணமாக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் பிரேத பரிசோதனையின் முடிவில் முத்தாயம்மாள் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து சந்தேக மரணத்தை போலீசார் கொலை வழக்காக மாற்றி, முத்தாயம்மாளை கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும், கொலையாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.