பங்களாப்புதூர் அருகே செந்நாய் கடித்து 3 ஆடுகள் சாவு
பங்களாப்புதூர் அருகே செந்நாய் கடித்ததில் 3 ஆடுகள் இறந்தன.
டி.என்.பாளையம்
பங்களாப்புதூர் அருகே செந்நாய் கடித்ததில் 3 ஆடுகள் இறந்தன.
விவசாயி
டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் பொய்யேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 54). விவசாயி. இவருடைய மனைவி சசிகலா.
இவர் அதே பகுதியில் 9 ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பு, மக்காச்சோளம், தென்னை ஆகியவைகளை பயிரிட்டு உள்ளார். மேலும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.
செந்நாய்கள்
இந்த நிலையில் நேற்று தனது தோட்டத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்துவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார். மதியம் திடீரென ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு சசிகலா வீட்டில் இருந்து வெளியே வந்து உள்ளார். அப்போது மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த 3 ஆடுகளை 5 செந்நாய்கள் கடித்துக்கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
உடனே அவர் அங்கிருந்த கம்பு ஒன்றை எடுத்து செந்நாய்கள் மீது வீசினார். உடனே செந்நாய்கள் அங்கிருந்து அருகில் உள்ள கரும்பு காட்டுக்குள் ஓடின. பின்னர் அவர் ஆடுகளின் அருகில் சென்று பார்த்தபோது செந்நாய்கள் கடித்ததில் அந்த 3 ஆடுகளும் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கண்காணிப்பு கேமரா
இதுபற்றி டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவான கால்தடங்களையும் ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து கரும்பு காட்டுக்குள் பதுங்கி இருந்து ஆடுகளை கடித்து கொன்றது செந்நாய்களா? நாய்களா? என்பது குறித்து கண்டுபிடிக்கவும் அதன் நடமாட்டத்தைக் கண்டறியவும், அந்த பகுதியில் 2 கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி உள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.