‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின்பெட்டி
ஈரோடு சின்னசேமூர் ரோட்டில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் கீழ்பகுதியில் அங்கு உள்ள தெருவிளக்குகளின் சுவிட்சை ஆன் செய்வதற்காக ஒரு மின் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இது பல மாதங்களாக ஆபத்தான நிலையில் கீழே தொங்கி கொண்டு இருக்கிறது. இதை எதிர்பாராமல் பொதுமக்கள், சிறுவர்கள் கையால் தொட்டு விட்டால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்சாரத்துறை அதிகாரிகள் இந்த மின்பெட்டியை சரி செய்யவேண்டும்.
கவிதா, சின்னசேமூர்.
மின் கம்பியில் செடி, கொடிகள்
எழுமாத்தூர் மின்வாரிய அலுவலகம் எதிர்புறம் ஈரோடு மெயின் ரோட்டில் ஒரு மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தில் இருந்து செல்லும் மின் கம்பியில் செடி, கொடிகள் படர்ந்து உள்ளது. கம்பிகள் கீழே விழுந்தால் மின் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனிமேலாவது மின் கம்பியில் படர்ந்த செடி, கொடிகளை அகற்ற மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், எழுமாத்தூர்.
தார் ரோடு தேவை
ஈரோடு பெரியசேமூர் அருகே கொங்கு வேளாண் நகர் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு சாக்கடை வடிகால் வசதி, தார் சாலை வசதியோ கிடையாது. இதனால் சாக்கடை கழிவுநீர் வெளியேற வழியின்றி அங்குள்ள சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மூக்கை பிடித்துக்கொண்டு ரோட்டில் பொதுமக்கள் நடந்து செல்கிறார்கள். எனவே எங்கள் பகுதியில் தார் ரோடு போடப்படுவதுடன், சாக்கடை வடிகால் வசதியும் ஏற்படுத்த வேண்டும்.
மு.விக்ரமாதித்தன், பெரியசேமூர்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
ஈரோடு சாஸ்திரி நகர் விநாயகர் கோவில் வீதியில் உள்ள சாக்கடையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே சாக்கடையில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்ரீராம், ஈரோடு.
வீணாக வெளியேறும் குடிநீர்
அந்தியூர் அருகே உள்ள மொடக்குறிச்சியானூரில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. எனவே உடைந்து போன குடிநீர் குழாயை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவீந்திரன், அந்தியூர்.
குழியை மூட வேண்டும்
கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே 4 ரோடுகள் சந்திக்கும் பகுதி வருகிறது. அந்த சந்திப்பு பகுதியில் இருந்து நாயக்கன்காடு செல்லும் ரோட்டில் ஆபத்தான குழி ஒன்று உள்ளது. இந்த குழி இருப்பது தெரியாமல் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைகிறார்கள். எனவே ஆபத்தான குழியை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.