மாணவர்கள் பத்திரமாக ஊர் திரும்ப மத்திய அரசு நடவடிக்கை

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் பத்திரமாக ஊர் திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.;

Update: 2022-02-27 20:40 GMT
மணவாளக்குறிச்சி:
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் பத்திரமாக ஊர் திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பேட்டி
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
உக்ரைனில் போர் நடந்து வருகிறது. அங்கு சிக்கியுள்ள மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசு, அந்த நாட்டு வெளியுறவுத்துறையுடன் தொடர்பில் இருந்து வருகிறது. 
உலக நாட்டு அதிபர்களிடம், நம் பிரதமருக்கு நல்ல மதிப்பு உண்டு. மாணவர்கள் பத்திரமாக விமானம் மூலம் ஊர் திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சமய மாநாடு
ஹைந்தவ (இந்து) சேவா சங்கம் சார்பில் நடந்த சமய மாநாட்டில் கலந்து கொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, பேசும் போது கூறியதாவது:- 
நம் நாட்டில் கொரோனா முற்றிலும் தீரவில்லை. கொரோனா தீரும்வரை அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். இது தற்காப்பு தான். இப்போது இந்தியாவில் 160 கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் விஞ்ஞானிகள் ஊக்கம் அளித்தனர். அதனால் இந்த குறுகிய காலத்தில் இந்தியா இவ்வளவு தடுப்பூசிகள் தயாரிக்க முடிந்தது. அதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
வெளிநாடுகளில் ஒருவருக்கொருவரை சந்தித்தால் கை குலுக்கி கொள்வார்கள். நம் இந்திய நாட்டில் கை தூக்கி கும்பிட்டு வணக்கம் சொல்வோம். இந்த பண்பாடு கொரோனா பரவலை தடுக்கிறது. இந்திய பண்பாடு உலகிலேயே சிறந்த பண்பாடாக உள்ளது. இந்த பண்பாடு கொரோனா காலத்தில் உலகிற்கு கற்று கொடுத்துள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்