மனைவியை கொன்ற கணவர் குண்டர் சட்டத்தில் கைது
திருக்கோவிலூரில் அருகே மனைவியை கொன்ற கணவனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள முதலூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 40). இவரது மனைவி பேபி(35). லோகநாதன், கடந்த மாதம் 12-ந் தேதி தனது மனைவி பேபியை கத்தியால் குத்திக் கொலை செய்தார். பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியை கொலை செய்துவிட்டு லோகநாதன் தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர். இந்நிலையில் லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தாா்.
இதையடுத்து கலெக்டர் ஸ்ரீதர், லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லோகநாதனிடம், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.