பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை

தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.;

Update: 2022-02-27 20:27 GMT
நாகர்கோவில்:
தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
சிலம்ப போட்டி
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் தனியார் அமைப்பினர் நடத்திய தமிழக அளவிலான அடிமுறை சிலம்பம் போட்டி நேற்று நடந்தது. போட்டியை அமைச்சர் மனோ தங்கராஜ் சிலம்பம் விளையாடி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சராக பதவியேற்றதும் நமது பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் விதமாகவும், இந்த கலைகளை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கற்றுக்கொள்ளும் வகையில் விளையாட்டுத் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 
அரசு நடவடிக்கை
குறிப்பாக, சிலம்ப கலை பயின்று முறையாக சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு துறைகளில் முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்குவதற்கான ஆணையை முதல்-அமைச்சர் பிறப்பித்துள்ளார். குமரி மாவட்டத்தில் தற்காற்பு கலைகள் உள்ளிட்ட பாரம்பரிய கலைகள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த தற்காப்பு கலைகள் முந்தைய காலகட்டத்தில் போர்க்கலையாக திகழ்ந்து வந்தது. எனவே மறைந்துபோன அனைத்து பாரம்பரிய கலைகளையும் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழ் இணையக் கல்விக் கழகம் வாயிலாக 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தற்காப்பு கலைகள், பாரம்பரிய மருத்துவம் குறித்த ஓலைச்சுவடிகள், ஏடுகள், ஆவணங்கள் போன்றவற்றை பாதுகாத்து மின்னணுவாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு துறையினரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆலோசனை கூட்டம்
மேலும் எனது (அமைச்சர் மனோதங்கராஜ்) தலைமையில் குமரி மாவட்டத்தில் தற்காப்பு கலைகளுக்கான கட்டமைப்பினை உருவாக்குகின்ற ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெகுவிரைவில் அதற்கான விரிவான திட்டம் ஏற்படுத்தப்படும். 
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார். இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர் சிறிது நேரம் சிலம்பம் ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
பேட்டி
பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சி மேயருக்கான வேட்பாளரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார். குமரி மாவட்டத்தில் பணநாயகம் வெற்றி பெறாது. ஜனநாயகம் மட்டுமே வெற்றி பெறும். இந்த ஆண்டு 75 ஆயிரம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது தொடர்பான விவகாரத்தில் யாரும் அவரை அச்சுறுத்த வில்லை. முன்னாள் அமைச்சர் என்பதால் அவர் சட்டத்தை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது. நதி நீர் தொடர்பான விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் அண்டை மாநில முதல்-மந்திரிகளுடன் சுமூகமாக பேசி தீர்வு ஏற்படுத்துவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்