1052 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,052 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. இதில் 1¼ லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டுள்ளது.;
கள்ளக்குறிச்சி
தமிழகத்தில் போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், துணை சுகாதார மையங்கள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், சுங்கச்சாவடி மையங்கள், ரெயில் நிலையம், பேருந்து நிலையங்கள் உள்பட 1,052 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது
நடமாடும் குழு
காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடந்தது. மேலும் திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிடுவதற்காக 25 நடமாடும் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் வீதி வீதியாக சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டினர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த முகாமில் மொத்தம் 1 லட்சத்து 23 ஆயிரத்து 513 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.