ரெயிலில் கடத்தப்பட்ட மேலும் 8½ கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாக சென்ற ரெயிலில் கடத்தப்பட்ட மேலும் 8½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சூரமங்கலம்:-
சேலம் வழியாக செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தலை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் ஜார்க்கண்ட் மாநிலம் டாட்டா நகரில் இருந்து ஆலப்புழா சென்ற ரெயிலில் 8½ கிலோ கஞ்சாவை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் தன்பாத்- ஆலப்புழா விரைவு ரெயிலில் (வண்டி எண்-13351) நேற்று அதிகாலை சேலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. ரெயில்வே போலீசார் அந்த ரெயிலில் ஏறி சோதனை செய்த போது, எஸ் -10 பெட்டியில் கைப்பை ஒன்று அனாதையாக கிடந்தது. அதில் 8½ கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து அதை பறிமுதல் செய்த போலீசார் யார் அதை ரெயிலில் கொண்டு வந்தது என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கைப்பையை யார் கொண்டு வந்தது என்பது தெரியவில்லை.
இதையடுத்து ரெயில்வே போலீசார், கஞ்சாவை சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் கஞ்சாவை கடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.