புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 490 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 490 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வினியோகிக்கப்படுகிறது.;
புதுக்கோட்டை:
போலியோ சொட்டு மருந்து
புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டையில் ராஜகோபாலபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 1,309 மையங்களும், நகரப் பகுதிகளில் 47 மையங்களும் என மொத்தம் 1,356 மையங்களில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 490 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இன்றும், நாளையும் நடக்கிறது
இதற்கான பணியில் 5,377 பணியாளர்கள், 87 வாகனங்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் ஏதேனும் குழந்தைகள் விடுபட்டிருந்தால் கூட இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) வீடு, வீடாக சென்று விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பல மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் படிக்க சென் றுள்ளனர். இதில் 5 மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அப்துல்லா எம்.பி., டாக்டர் முத்துராஜா எம்.எல்.ஏ., பொதுசுகாதார துணை இயக்குனர் அர்ஜுன்குமார், நகராட்சி ஆணையர் நாகராஜன், முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் நைனாமுகமது மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கறம்பக்குடி
கறம்பக்குடி அரசு மருத்துவமனை, மழையூர், வாணக்கன்காடு, கோட்டைக்காடு, குளந்திரான்பட்டு, ரெகுநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்களின் சார்பில் கறம்பக்குடி தாலுகா பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதில் 5 வயதுக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
அன்னவாசல்
அன்னவாசல் வட்டாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அன்னவாசல் வட்டாரத்தில் உள்ள முக்கண்ணாமலைப்பட்டி, சத்தியமங்கலம், காவேரிநகர், மதியநல்லூர், நார்த்தாமலை, ராப்பூசல், தென்னலூர், பரம்பூர், புல்வயல், மலைக்குடிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், பஸ் நிலையங்கள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
அன்னவாசல் பஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாமை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் முத்துக்கருப்பன், சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர். அன்னவாசல் வட்டார பகுதியில் நடந்த முகாம்களில் மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
காரையூர்
பொன்னமராவதி வட்டாரம் காரையூர், மேலத்தானியம் உள்பட பொன்னமராவதி தாலுகாவில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் பொது இடங்களில் மொத்தம் 98 மையங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்து 561 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த முகாமை காரையூர் மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன், சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
விராலிமலை
விராலிமலை அரசு மருத்துவமனை மற்றும் கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் விராலிமலை கடைவீதி, அங்கன்வாடி மையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள் என 45 இடங்களில் நேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முகாமில் 5,495 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து செலுத்தப்பட்டது.
அரிமளம்
அரிமளம் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் கடியாபட்டி, ராயவரம், அரிமளம், கீழாநிலை, ஏம்பல் ஆகிய 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 85 கிராமங்களில் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரகுவரன் மற்றும் மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் தன்னார்வலர்கள் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு 8,581 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர். .துறையூர் ஊராட்சி கீரணிப்பட்டி கிராமத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் தொடங்கி வைத்தார். இதேபோல் அனைத்து ஊராட்சிகளிலும் போலியோ சொட்டு மருந்து முகாமை ஊராட்சி மன்றத் தலைவர்கள் தொடங்கி வைத்தனர்.
கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை
கந்தர்வகோட்டை பஸ் நிலையம், அரசு நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையங்களிலும், ஆதனக்கோட்டை நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
ஆலங்குடி
ஆலங்குடி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து அங்கன்வாடிகளிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. ஆலங்குடியில், சிவன் கோவில், கம்பர் தெரு, ஆண்டிகுளம் உள்ளிட்ட அங்கன்வாடிகளிலும், அரசு மருத்துவமனை, பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
ஆலங்குடி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.