தினத்தந்தி புகார் பெட்டி. பொதுமக்கள் குறைகள் அடங்கிய பகுதி

தினத்தந்தி புகார் பெட்டி;

Update: 2022-02-27 18:13 GMT
 கால்வாய் சேதம்

வேலூர் அருகே ரங்காபுரத்தில் இருந்து செங்காநத்தம் செல்லும் சாலையின் ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. வாகனங்கள் பாரத்தின் காரணமாக கால்வாய் மீது போடப்பட்டு இருந்த சிலாப்புகள் உடைந்து, கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்கிறது. சிலாப்புகளை உறுதியாக அமைத்து சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்ராஜ், செங்காநத்தம்.

 சாலை பள்ளம் சரி செய்ய வேண்டும்

வேலூர் நேஷனல் தியேட்டர் சந்திப்பில் இருந்து புதிய மீன் மார்க்கெட் செல்லும் சாலை நடுவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் போது விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்தப் பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மலரவன், வேலூர்.

 பல இடங்களில் குழாய்கள் உடைப்பு

வேலூர் கொசபேட்டையில் இருந்து ஓல்டு டவுன் செல்லும் வழியில் உத்திரிய மாதா கோவில் தெரு உள்ளது. இங்கு 3-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நாட்களில் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. குழாய்கள் உடைப்பை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்ராம், வேலூர்.

அகற்றப்பட்ட தொட்டியை மீண்டும் வைக்க வேண்டும்

போளூரில் ஒரு எலக்ட்ரிக்கல்ஸ் கடை எதிரில் பொது சிறுமின்விசை தொட்டி இருந்தது. அதை ஏதோ ஒரு காரணத்துக்காக அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டனர். அதை, மீண்டும் அதே இடத்தில் வைக்கவில்லை. இதனால் சிந்தாதிரிப்பேட்டை தெருவில் உள்ள பொதுமக்களும், கடைக்காரர்களும் தண்ணீருக்காக சிரமப்படுகிறார்கள். அப்புறப்படுத்தப்பட்ட அதே இடத்தில் சிறுமின்விசை தொட்டியை அமைத்து பொதுமக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-க.முத்து, சமூக ஆர்வலர், போளூர். 

கழிவுநீர் கால்வாய் கட்டுவார்களா?

ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கம் நாற்கர சாலை ஓரத்தில் கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் ஓடாமல் தேங்கி நிற்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கால்வாய் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜ்மோகன், அரப்பாக்கம்.

வேலூர் மாநகராட்சி மண்டலம்-1 வார்டு 1-ல் கல்புதூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் 3-வது மெயின் தெரு, அண்ணா தெரு உள்ளிட்ட பல தெருக்களில் இதுவரை கழிவுநீர் கால்வாய் கட்டப்படாமல் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வசிப்போர் கழிவுநீரை வீடுகளுக்கு எதிரே சாலையிலும், அக்கம் பக்கத்திலும் வெளியேற்றுகின்றனர். கழிவுநீர் கால்வாய் கட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பி.துரை, கல்புதூர்.

மேலும் செய்திகள்