குமரி மாவட்டத்தில் 1.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
குமரி மாவட்டத்தில் 1,236 முகாம்கள் மூலம் 1.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 1,236 முகாம்கள் மூலம் 1.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
போலியோ சொட்டுமருந்து முகாம்
தமிழக அரசின் ஆணைக்கிணங்க குமரி மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமுக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
1,236 முகாம்கள்
1995-ம் ஆண்டு முதல் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலுமாக அகற்றிடும் நோக்கில் ஆண்டிற்கு இரண்டு முறை சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வந்தது. 1997-ம் ஆண்டிற்கு பிறகு குமரி மாவட்டத்தில் போலியோவால் பாதித்த குழந்தைகள் கண்டறியப்படவில்லை. இந்தியாவில் ஜனவரி 2011 முதல் தொடர்ந்து 3 ஆண்டுகளாக போலியோ நோயினால் எந்த குழந்தையும் பாதிக்கப்படாததால் 27-3-2014 உலக சுகாதார நிறுவனத்தால் இந்தியா போலியோ இல்லாத நாடாக சான்றளிக்கப்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாய்வழியாக மட்டும் அல்லாமல் ஊசி மூலமாகவும் போலியோ மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த சிறப்பு முகாம் ஒரே கட்டமாக இன்று (அதாவது நேற்று) நடக்கிறது. இந்த போலியோ சொட்டு மருந்து முகாம்கள் வாயிலாக சுமார் 1 லட்சத்து 34 ஆயிரத்து 170 குழந்தைகள் பயன்பெறுகின்றனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, அனைத்து அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 1,236 முகாம்களில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணி நடைபெறுகிறது.
மலைப்பகுதிகளில்
மேலும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பூம்புகார் படகுத்துறை மற்றும் காந்திமண்டபம் ஆகிய இடங்களில் 20 சிறப்பு முகாம்களும், உரிய பஸ் வசதி இல்லாத மலைப்பகுதிகளில் 14 நடமாடும் குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டமலை மற்றும் தச்சமலை பகுதிகளுக்கு படகுகளில் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாம் ஆய்வுப் பணிகளுக்கு 146 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தை போலியோ இல்லாத மாவட்டமாக மாற்றிட பெற்றோர்கள் அனைவரும் தங்களது 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
முகாமில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி, இணை இயக்குனர் (மருத்துவப் பணிகள்) பிரகலாதன், ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், குழந்தைகள் நல பேராசிரியர் சுரேஷ், டாக்டர் பிரவீன், தி.மு.க. மீனவரணி மாவட்ட முன்னாள் அமைப்பாளர் பசலியான், வக்கீல் சதாசிவம் உள்பட டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.