எள் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
கும்பகோணம் பகுதியில் எள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணம்:-
கும்பகோணம் பகுதியில் எள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
எள் சாகுபடி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சம்பா, தாளடி அறுவடை தற்போது முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து விவசாயிகளில் சிலர் தங்களிடமுள்ள மின் மோட்டார் உதவியுடன் நிலத்தை மீண்டும் உழவு செய்து 3-ம் போக நெல் சாகுபடி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக குறுகிய நாள் வயதுள்ள நெல் ரகங்களை விதை விட்டுள்ளனர். அதேவேளையில் பெரும்பாலான விவசாயிகள் எள் சாகுபடி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக நிலத்தை டிராக்டர் மூலம் கோடை உழவு செய்து தயார் செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயி சேகர் கூறியதாவது:-
விலை உயரும்
தற்போது எள் பயிரிட உகந்த சூழல் உள்ளது. மேலும் எள் பயிர் 70 நாட்கள் முதல் 80 நாட்களில் அறுவடைக்கு வரும். தற்போது எள் பயிரிட்டால் சரியான காலத்தில் அறுவடை முடிந்து வருகிற ஜூன் மாதத்தில் குறுவை பயிர் செய்ய நிலத்தை தயார் செய்யலாம்.
அதோடு மட்டுமல்லாமல் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு எள்ளின் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. எனவே நான் எள் பயிரிட முடிவுசெய்து வயலை டிராக்டர் மூலம் உழவு செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.