திருவண்ணாமலை அருகே குடிநீர் குழாயில் பூச்சி மருந்து கலப்பு
திருவண்ணாமலை அருகே ஆட்டோ டிரைவர் வீட்டின் முன்பு உள்ள குடிநீர் குழாயில் பூச்சி மருந்து கலந்துள்ளதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகே ஆட்டோ டிரைவர் வீட்டின் முன்பு உள்ள குடிநீர் குழாயில் பூச்சி மருந்து கலந்துள்ளதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
குடிநீர் குழாயில் பூச்சி மருந்து
திருவண்ணாமலை அருகில் உள்ள அய்யம்பாளையம் புதூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணபதி, ஆட்டோ டிரைவர். இவரின் வீட்டின் முன்பு குடிநீர் குழாய் உள்ளது. நேற்று காலை கணபதியின் தங்கை தண்ணீர் பிடிப்பதற்காக குடிநீர் குழாயின் பைப் மாட்டி மோட்டார் மூலம் தண்ணீர் பிடித்துள்ளார். அப்போது தண்ணீர் வழக்கத்திற்கு மாறாக வெள்ளை நிறத்தில் நுரையுடன் வந்து உள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தினரை அழைத்து தண்ணீரை காண்பித்து உள்ளார். அப்போது அவர்கள் தண்ணீரை நுகர்ந்து பார்த்து அதில் பூச்சி மருந்து (பால்டாயில்) கலந்து இருப்பது போன்று உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அப்போது அப்பகுதியில் உள்ள முட்புதரில் பால்டாயில் டப்பா கிடந்துள்ளது. இதனால் கணபதி மற்றும் அவரது தங்கை அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசில் புகார்
மேலும் கணபதியின் வீட்டின் முன்பு இருந்த குடிநீர் குழாய் மூலம் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் நேற்று குடிநீர் பிடித்து உள்ளனர். இதை அறிந்த அவர்கள் தண்ணீரை கீழே கொட்டினர். மேலும் அப்பகுதி மக்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை பார்வையிட்டனர். இதில் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் அதிகாலை 3 மணியளவில் ஒருவர் சுற்றி திரிவது போன்று காணப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் தகவலறிந்த திருவண்ணாமலை ஒன்றிய அலுவலர்கள் அந்த பகுதிக்கு நேரில் சென்று குடிநீர் குழாயை சுத்தம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து கணபதி திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கணபதி அவரது தாத்தாவின் மீது சந்தேகம் உள்ளதாக புகார் செய்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.