வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரிக்கு சென்றபோது வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-02-27 18:00 GMT
பெரம்பலூர், 
உடல்நலக்குறைவு
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் 9-வது வார்டுக்குட்பட்ட அவ்வையார் தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 37). இவருக்கு சீத்தாலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகள், மகன் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பரமேஸ்வரன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார். இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி பரமேஸ்வரனுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் சீத்தாலட்சுமி வீட்டை பூட்டி விட்டு, அவரை சிகிச்சைக்காக அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பின்னர் அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். 
நகை, பணம் திருட்டு
சிகிச்சை முடிந்து பரமேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் பின்பக்க கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டும், கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டும் திறந்து கிடந்தன. மேலும் அறையில் இருந்த 2 பீரோக்களில், ஒரு பீரோவில் இருந்த 5 பவுன் நகையும், ரூ.28 ஆயிரத்து 500 திருட்டு போயிருந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாய் நிஞ்சா வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். 
இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், திருட்டில் ஈடுபட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்