ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி
மதுரை அருகே ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி செய்த நெல்லை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை, பிப். 28-
மதுரை அருகே ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி செய்த நெல்லை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஏ.டி.எம். மையம்
மதுரை மாவட்டம் இளமானூர் அருகே உள்ள பொட்டபனையூர் ஆர்.எம்.காலனியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டி (வயது 54). இவர் வங்கியில் ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். அந்த பணம் அவரது வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில், அந்த பணத்தை எடுப்பதற்காக சவுந்தர பாண்டி கருப்பாயூரணி பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சவுந்தரபாண்டிக்கு பணம் எடுப்பதற்கு உதவினார். ஆனால் பணம் எடுக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து சவுந்தரபாண்டி வீட்டிற்கு வந்து விட்டார். அப்போது அவரது செல்போனுக்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கியில் இதுகுறித்து கேட்டார். அதற்கு வங்கி நிர்வாகத்தினர், வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது குறித்து தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த சவுந்தரபாண்டி கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார். மேலும், ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வாலிபர் ஒருவர் உதவியதையும், அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீசில் அவர் தெரிவித்தார்.
கைது
போலீசார் ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது சவுந்தரபாண்டிக்கு உதவிய வாலிபர், சவுந்தரபாண்டியின் ஏ.டி.எம். ரகசிய குறியீடு எண்ணை பயன்படுத்தி பணத்தை எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது.
மேலும், அந்த வாலிபர் நெல்லை மாவட்டம் வடக்கு பள்ளிவாசல் தெரு பீர் ரிஸ்வான் ஷாகான் (30) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து தொடர்விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.டி.எம். மையத்தில் முன் பின் தெரியாத நபர்களிடம் ரகசிய எண்ணை தெரிவிக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.