மங்களூரு பல்கலைக்கழக அணி வெற்றி

தென்மண்டல பல்கலைக்கழக பெண்கள் கபடி போட்டியில் மங்களூரு பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.

Update: 2022-02-27 17:53 GMT
காரைக்குடி,

தென்மண்டல பல்கலைக்கழக பெண்கள் கபடி போட்டியில் மங்களூரு பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.

பெண்கள் கபடி போட்டி

இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பின் சார்பில் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்ககம் மற்றும் புதுவயல் வித்யாகிரி கலை கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தின. 5 நாட்கள் வித்யாகிரி கல்லூரியில் இப்போட்டிகள் நடைபெற்றன.
இதன் நிறைவு விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் பேராசிரியர் கருப்புசாமி தலைமை தாங்கினார். ஆட்சிமன்ற குழு உறுப்பினர் குணசேகரன் முன்னிலை வகித்தார். இப்போட்டிகளில் தென் மண்டலத்தை சேர்ந்த தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மற்றும் கர்நாடகா பல்கலைக்கழகங்களில் இருந்து 53 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

மங்களூரு அணி வெற்றி

நாக் அவுட் முறையில் தேர்வு பெற்ற 4 அணிகள் லீக் சுற்றில் விளையாடின. லீக் சுற்றில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மங்களூரு பல்கலைக்கழகம் முதலிடத்தையும், தமிழகத்தைச் சேர்ந்த கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் 2-வது இடத்தையும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 3-வது இடத்தையும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 4-வது இடத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற 4 அணிகளும் ராஜஸ்தானில் மார்ச் மாதம் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில் பங்கு பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
வெற்றி பெற்ற அணிகளுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் பேராசிரியர் கருப்புசாமி பரிசுகளை வழங்கி கவுரவித்தார். முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்கத்தின் இயக்குனர் செந்தில்நாதன் அனைவரையும் வரவேற்றார்.

மேலும் செய்திகள்