தர்மபுரி மாவட்டத்தில் 984 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்
தர்மபுரி மாவட்டத்தில் 984 இடங்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.;
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 984 இடங்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.
போலியோ சொட்டு மருந்து
தர்மபுரி மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கிராமப்புற பகுதிகளில் 964 இடங்களிலும், நகராட்சி பகுதியில் 20 இடங்களிலும் என மொத்தம் 984 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற்றது. இதில் 4,080- க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சந்தைகள், சினிமா தியேட்டர்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் சுங்கச்சாவடி உள்ளிட்ட இடங்களில் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து பெற்று சென்றனர்.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் கலெக்டர் திவ்யதர்சினி முகாமை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் நடைபெறும் இந்த முகாம்களில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 595 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தர்மபுரி மாவட்டத்தில் பொது மக்கள் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.
இந்த முகாமில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், தாசில்தார் ராஜராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் திவ்யதர்சினி தர்மபுரி நகராட்சி மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.