கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 959 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 959 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. கிருஷ்ணகிரியில் நடந்த முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று தொடங்கி வைத்தார்.

Update: 2022-02-27 17:03 GMT
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 959 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. கிருஷ்ணகிரியில் நடந்த முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று தொடங்கி வைத்தார்.
போலியோ சொட்டு மருந்து
கிருஷ்ணகிரி நகராட்சி புதிய பஸ் நிலையம், பெத்ததாளப்பள்ளி ஊராட்சி மற்றும் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. இந்த முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்பிள்ளைவாத நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு 10 ஒன்றியங்கள், 2 நகராட்சி பகுதிகள் உள்பட 879 கிராம பகுதி மையங்களிலும், 80 நகர்ப்புற மையங்கள் என மொத்தம் 959 இடங்களில் 1 லட்சத்து 59 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 56 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 6 நகர் நல மையங்கள், 6 அரசு மருத்துவமனைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 2 லட்சத்து 16 ஆயிரம் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
பணியாளர்கள்
இந்த போலியோ சொட்டு மருந்துகளை பாதுகாக்க உரிய குளிர்சாதன பெட்டிகள் அனைத்து மையங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. போலியோ சொட்டு மருந்து அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் சுங்கச்சாவடிகளில் இடைவிடாமல் வழங்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் வேறு இடங்களில் இருந்து பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக வந்து தங்கி உள்ளவர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் ஆகியோருக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து 5 வயது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் 3 ஆயிரத்து 892 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த முகாமில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், மாவட்ட தாய்சேய் அலுவலர் பியூலா, வட்டார மருத்துவ அலுவலர்கள் சுசித்ரா, இனியாள் மண்டோதரி, தாசில்தார் சரவணன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்