ஓடும் காரில் தீ
வடமதுரை அருகே சென்று கொண்டிருந்த காரில் திடீரென்று தீப்பிடித்தது.;
வடமதுரை:
செம்பட்டி அருகே உள்ள சுரைக்காய்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். நேற்று இரவு இவர், செம்பட்டியில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரை, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த கதிர்வேல் (39) ஓட்டினார். திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வடமதுரை பைபாஸ் பிரிவு அருகே கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது, திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனால் காரை சாலையோரமாக நிறுத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரும் கீழே இறங்கி பார்த்தனர். சிறிது நேரத்தில் மள, மளவென தீப்பற்றி கார் கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள், வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதிராமலிங்கம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து நாசமானது. தீப்பிடித்தவுடன் காரில் இருந்து கணேசன், கதிர்வேல் இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். அதில், கார் ஏ.சி.யில் மின்கசிவு ஏகாரணமாக தீப்பற்றி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.