கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்திழுத்த சேவல்கள்

திண்டுக்கல் அருகே நடந்த கண்காட்சியில், பார்வையாளர்களை சேவல்கள் கவர்ந்திழுத்தன.

Update: 2022-02-27 16:44 GMT
திண்டுக்கல்: 


சேவல் கண்காட்சி
உலக சேவல் அமைப்பின் திண்டுக்கல் கிளை மற்றும் அனைத்து இந்திய சேவல் வளர்ப்பு நண்பர்கள் குழு சார்பில்  திண்டுக்கல் அருகே உள்ள குட்டியபட்டியில்  சேவல் கண்காட்சி  நடந்தது. உலக சேவல் அமைப்பின் திண்டுக்கல் கிளை ஒருங்கிணைப்பாளர்கள் நெல்சன், மாவட்ட செயலாளர் சலீம் ஆகியோர் மேற்பார்வையில் இந்த கண்காட்சி நடந்தது.
கண்காட்சியில் திண்டுக்கல், கரூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு தாங்கள் வளர்க்கும் சேவல்களை காட்சிப்படுத்தினர். 

இதில் மயில், வெள்ளை, கீரி, செம்பொன்ரம், மஞ்சள் பொன்ரம், செவலை, கிளிமூக்கு, விசிறிவால் உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட சேவல்கள் இடம்பெற்றன.

தங்க நாணயம் பரிசு
சேவல்களின் உடலமைப்பு, வாலின் நீளம், மூக்கின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் 50 சிறந்த சேவல்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் முதலிடம் பிடித்த 25 சேவல்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயம், 2-ம் இடம் பிடித்த 25 சேவல்களுக்கு தலா ஒரு மிக்சி பரிசாக வழங்கப்பட்டன. 
கண்காட்சியில் இடம்பெற்ற சேவல்களின் எடை, வாலின் நீளம், முக அமைப்பு ஆகியவற்றை பொறுத்து அவற்றுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை சேவல்களின் விலை நிர்ணயிக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு இந்த கண்காட்சி நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு நடந்த கண்காட்சியை ஏராளமானோர் தங்களது குடும்பத்தினருடன் வந்து பார்த்து மகிழ்ந்தனர்.

கவர்ந்திழுத்த சேவல்கள்
காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் கண்காட்சியில் சேவல்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக கிளிமூக்கு, விசிறிவால், பால்வெள்ளை, மஞ்சள் பொன்ரம், கருங்கீரி உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த சேவல்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. அவற்றின் தோற்றம், கால் நகம், மூக்கு ஆகியவற்றின் வடிவங்கள் சேவல்களை கம்பீரமாக காட்சிப்படுத்தின.

மேலும் செய்திகள்