பென்னிகுயிக் பிறந்த நாளையொட்டி இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

பென்னிகுயிக் பிறந்த நாளையொட்டி கூடலூரில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.;

Update:2022-02-27 22:14 IST
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் 181-வது பிறந்தநாளையொட்டி நேற்று கூடலூரில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இதற்கான தொடக்க நிகழ்ச்சிக்கு பெரியாறு-வைகை நீர்ப்பாசன 5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமை தாங்கினார். தேனி வடக்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து போட்டியை தொடங்கி வைத்தனர். புள்ளிமான் சிட்டு, தட்டாண்சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் மாடு, நடுமாடு, பெரிய மாடு ஆகிய 7 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது. இதில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதிகளை சேர்ந்த 182 ஜோடி மாட்டுவண்டிகள், காளைகளுடன் பங்கேற்றன.
காளைகளின் வயது, தூரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதன்படி மொத்தம் 28 பேர் பரிசுகளை பெற்றனர். குறிப்பாக பெரிய மாடு பிரிவுக்கு அதிகபட்ச தூரமாக கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் வழிவிடும் முருகன் கோவில் வரை 8 கிலோமீட்டர் நிர்ணயிக்கப்பட்டது.
இவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. கூடலூர்-லோயர்கேம்ப் தேசிய நெடுஞ்சாலையில் மாட்டுவண்டிகளுடன் சீறிப்பாய்ந்த காளைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை 5 மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் பொன் காட்சி கண்ணன், துணைசெயலாளர் ரஞ்சித்குமார், துணைத்தலைவர் ராஜீவ், பொருளாளர் லோகு ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்