தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-;
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
நடக்க முடியாத நடைபாதை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 3 ஐந்து லைன்ஸ் பகுதியில் இருந்து சின்னஒளிமடாவிற்கு நடைப்பாதை செல்கிறது. இந்த நடைபாதை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக நடந்து செல்லும் அங்கன்வாடி குழந்தைகள் உள்பட பலர் பெரிதும் அவதியடைந்து வருகிறார் கள். அத்துடன் நீரோடையை ஒட்டி உள்ள பகுதியில் தடுப்பு சுவரும் கட்டப்படவில்லை. இதனால் அதற்குள் தவறி விழும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஸ்வநாதன், நெல்லியாளம்.
சுத்தம் இல்லாத குடிநீர் தொட்டி
கோவை சேரன் மாநகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டி மூலம்தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. முறையாக இந்த தொட்டி முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம்செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
ராதா, பீளமேடு.
நடைபாதை ஆக்கிரமிப்பு
கோத்தகிரி மார்க்கெட் திடல் அருகே பள்ளி மாணவ, மாணவி கள் பாதுகாப்பாக சாலையை கடக்க நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. மேம்பாலத்திற்கு கீழ் மீன் வளர்ச்சிக் கழக, மீன் விற்பனை நிலையம் உள்ளது. இந்தக் கடை தற்போது உணவகமாக செயல்பட்டு வருவதுடன், நடைபாதையை ஆக்கிரமித்து உணவருந்த மேஜைகள் வைக்கப்பட்டு உள்ளதால், பள்ளி வாகனங்கள் நிறுத்த முடியாமலும், குழந்தைகள் நடக்க முடியாமலும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கே.ஏ.பி.சீனிவாசன், கோத்தகிரி.
சாலை வசதி இல்லை
கோத்தகிரி அருகே உள்ள தாளமொக்கை ஆதிவாசி கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. இந்த பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. எனவே இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பயத்துடன் செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. எனவே பழங்குடியின மக்கள் நலன் கருதி இந்த கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காளன், தாளமொக்கை.
நிழற்குடை வேண்டும்
நெகமம் அருகேஎம்மேகவுண்டன்பாளையம், செட்டியக்கா பாளையம் செல்லும் ரோட்டில் வடக்குகாடு என்ற பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப் பட்டது. அந்த நிழற்குடை பழுதானதால் மேற்கூரை இடிந்து தொங்கி கொண்டு இருந்தது. அத்துடன் புதர்கள் படர்ந்து நிழற்குடை இருக்கும் இடம் தெரியாத நிலை உள்ளது. அத்துடன் இடிந்த நிலையில் இருந்த கான்கிரீட் கம்பியையும் சிலர் உடைத்து எடுத்துச்சென்று விட்டனர். இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் அங்கு நிழற்குடை அமைக்க வேண்டும்.
சுந்தரமூர்த்தி, செட்டியக்காபாளையம்.
மாற்று சாலை
காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் மேல்புறம் தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகே வாகனங்கள் செல்ல வசதி உள்ளது. சில இடங்களில் மட்டுமே பாதை குறுகலாக இருக்கிறது. இந்த பாதைதை அகலப்படுத்தி மேட்டுப்பாளையத்துக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தினால் காரமடை-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிசாமி, ஒண்டிப்புதூர்.
வாகன ஓட்டிகள் அவதி
கோவை சத்தி ரோட்டில் அத்திப்பாளையம் பிரிவில் இருந்து கணபதி பஸ்நிலையத்தை நோக்கி வரும் வழியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சாலையில் பள்ளம் உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. நடுரோட்டில் பள்ளம் இருப்பதால் இருசக்கர வாகனங்களில் வேகமாக வருபவர்கள் அந்த பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி காயத்துடன் தப்பித்துச்செல்லும் நிலை நீடித்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலையில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.
கோபால், கணபதி.
ஒளிராத மின்விளக்குகள்
கோவை அவினாசி சாலை எல்.ஐ.சி. சிக்னலில் இருந்து பார்க் கேட் செல்லும் சாலையில் தேசிய நெடுஞ்சாலை அலுவலகம் அருகே 2 வேகத்தடை உள்ளது. இதன் அருகே மின்விளக்குகள் உள்ளன. இவை கடந்த சில நாட்களாக ஒளிருவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அங்கு விபத்து நடக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஒளிராமல் இருக்கும் மின்விளக்கை ஒளிர செய்ய வேண்டும்.
கணேசன், கோவை.
துர்நாற்றம் வீசும் கழிப்பிடம்
கோவை காந்திபுரம் மத்திய பஸ்நிலையத்தில் சிறுநீர் கழிப்பிடம் உள்ளது. இது முறையாக சுத்தம் செய்யப்படாததால் அதிகளவில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இங்கு வந்து செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சிறுநீர் கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.
சந்தானமூர்த்தி, காந்திபுரம்.
பாலத்தில் ஆபத்தான பள்ளம்
கோவை புட்டுவிக்கி ரோடு செல்வபுரம் சோதனைச்சாவடி அருகே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புதிய பாலம் கட்டப் பட்டது. இந்த பாலப்பகுதியில் தற்போது பள்ளம் ஏற்பட்டு உள்ளது. சாலைக்கும் - பாலத்துக்கும் இடையே பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் இந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த ஆபத்தான பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.
சுல்தான் முகமது, செல்வபுரம்.