மலை ரெயிலில் டீசல் எஞ்ஜின் பொருத்தி சோதனை ஓட்டம்
பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக மலை ரெயிலில் டீசல் எஞ்சின் பொருத்தி சோதனை ஓட்டம் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே நடந்தது.
மேட்டுப்பாளையம்
பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக மலை ரெயிலில் டீசல் எஞ்சின் பொருத்தி சோதனை ஓட்டம் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே நடந்தது.
மலை ரெயில்
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகிறார்கள்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் நீராவி ரெயில் எஞ்சினும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு டீசல் ரெயில் என்ஜினிலும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பர்னஸ் ஆயில் விலை உயர்வு மற்றும் சுற்றுச் சூழல் மாசுபடுவதை தடுக்க மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு டீசல் மூலம் நீராவி ரெயில் என்ஜினை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
டீசல் என்ஜின்
இதற்காக குன்னூர் லோகோ ஷெட் பணிமனையில் மலை ரெயில் இருப்புப்பாதை துணை இயக்குனர் (பாரம்பரியம்) சதீஷ் சரவணன் மேற்பார்வையில் பணி நடந்தது.
ரெயில்வேதுறை பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் நீராவி ரெயில் என்ஜினை புதிய தொழில்நுட்பத்துடன் டீசல் ரெயில் என்ஜின் ஆக மாற்றி வடிவமைத்தனர்.
பணிகள் நிறைவடைந்ததும் டீசல் ரெயில் எஞ்சின் சோதனை ஓட்டத்திற்காக மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து புதிதாக மாற்றி வடிவமைக்கப்பட்ட டீசல் ரெயில் என்ஜினில் 5 பெட்டிகள் இணைக்கப்பட்டது.
சோதனை ஓட்டம்
பிறகு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சோதனை ஓட்டம் பல கட்டங்களாக நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு டீசல் என்ஜின் பொருத்தி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பல கட்டங்களாக சோதனை ஓட்டம் முடித்த பின்னர் டீசல் மூலம் இயங்கும் என்ஜின் பொருத்தப்படும் என்றனர்.