உடுமலை நகராட்சி பகுதியில் 20 இடங்களில் நடந்த முகாம்களில் 4,398 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
உடுமலை நகராட்சி பகுதியில் 20 இடங்களில் நடந்த முகாம்களில் 4,398 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
உடுமலை,
உடுமலை நகராட்சி பகுதியில் 20 இடங்களில் நடந்த முகாம்களில் 4,398 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
20 இடங்களில் முகாம்
உடுமலை நகராட்சி பகுதியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மொத்தம் 4,486 பேர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுப்பதற்கான முகாம் உடுமலை நகராட்சி பகுதியில் மத்திய பஸ் நிலையம், ரெயில் நிலையம், அரசு மருத்துவமனை, நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இ.எஸ்.ஐ.மருத்துவமனை, ரோட்டரி நர்சரிபள்ளி, நடமாடும் மையம் உள்ளிட்டு மொத்தம் 20 இடங்களில் நேற்று நடந்தது.
4,398 பேருக்கு சொட்டு மருந்து
இந்த முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மொத்தம் 4,398 பேருக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையாளர் பி.சத்தியநாதன், நகர்நல அலுவலர் டாக்டர் க.கவுரி சரவணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.
முகாமிற்கு வர இயலாமல் விடுபட்டுள்ள குழந்தைகளுக்கு இன்றுமுதல்3நாட்களுக்கு வீடு, வீடாக சென்று சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.
தளி
எரிசனம்பட்டியில் 33 மையங்களும், பெரிய வாளவாடியில் 29 மையங்களும், அமராவதிநகரில் 28 மையங்களும், செல்லப்பம்பாளையத்தில் 23 மையங்களும் மற்றும் உடுமலை நகரப்பகுதியில் 20 மையங்களிலும் சேர்த்து ஆக மொத்தம் 133 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.இதில் சொட்டு மருந்து செலுத்தி கொண்ட குழந்தைகளின் விவரம் பின்வருமாறு:-
எரிசனம்பட்டி பகுதியிலுள்ள 1918 குழந்தைகளில் 1881 பேரும் (98 சதவீதம்), பெரியவாளவாடி பகுதியில் உள்ள 4 ஆயிரத்து 782 குழந்தைகளில் 4 ஆயிரத்து 687 பேரும் (98 சதவீதம்), அமராவதி பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 312 குழந்தைகளில் 2 ஆயிரத்து 277 பேரும் (98 சதவீதம்), செல்லப்பம்பாளையம் பகுதியில் 1940 குழந்தைகளில் 1912 பேரும் (98.5 சதவீதம்), உடுமலை நகரப்பகுதியில் உள்ள 4 ஆயிரத்து 486 பேரில் 4 ஆயிரத்து 398 பேரும் (98 சதவீதம்) சொட்டு மருத்து செலுத்தி கொண்டனர். ஆக மொத்தம் 133 மையங்களை அடிப்படையாகக் கொண்ட 15 ஆயிரத்து 438 குழந்தைகளில் 15 ஆயிரத்து 115 (98 சதவீதம்) குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்தப்பட்டு உள்ளது.